நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ், மட்டக்களப்பிற்கும் வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் அண்மையில் அல்பா வேரியன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது டெல்டா வேரியனும் இனங்காணப்பட்டுள்ளது. இதுவும் மட்டக்களப்புக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில், 3968பேர் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகையினால் மக்கள் அனைவரும் ஒன்றுகூடுவதை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக மேலும் கடைப்பிடிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.