நுவரெலியா- கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளன.
அதாவது, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர் பிரிவு, களுதுமெத கிராம சேவகர் பிரிவு, பெரமான தெற்கு கிராம சேவகர் பிரிவு, டன்சினன் கிராம சேவக பிரிவு மற்றும் கொரகஓயா கீழ்பிரிவு கிராம சேவகர் பிரிவு ஆகியனவே இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 168 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் எனவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
மேலும் கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகளுக்கு பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.