ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், ஹொண்டா அணியின் வீரரான, மார்க் மார்க்வெஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.
அந்த வகையில் ஆண்டின் எட்டாவது சுற்றான ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று சட்ச்சென்ரிங் ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சீறிபாய்ந்தனர்.
இதில், ஹொண்டா அணியின் வீரரான, மார்க் மார்க்வெஸ் பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 07.243 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, கே.டி.எம் அணியின் வீரரான மிகுவல் ஒலிவேரா, 1.610 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.
இவரையடுத்து, யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ, 6.772 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள எட்டு சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ மூன்று வெற்றிகளுடன் 131 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 109 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஜெக் மில்லர் இரண்டு வெற்றிகளுடன் 100 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஒன்பதாவது சுற்றான டச் டிடி, எதிர்வரும் 27ஆம் திகதி டிடி எஸ்சென் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.