கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தொற்றின் முதலாவது, இரண்டாவது அலைகளுக்கு எதிராக மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.
கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்து பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிவசப்படுகிறார். அத்தகைய உயிரிழப்புகளை மத்திய அரசு எளிதில் தடுத்திருக்க முடியும்.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகளை நாடு முழுவதும் மேம்படுத்த வேண்டும்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிக முக்கிய ஆயுதமாக விளங்குகிறது. எனவே கொரோனா தடுப்பூசி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு கவனம் அளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.