நாட்டின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டாய்கத்தான் -2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இதன்போது பேசிய அவர் சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டொலராக உள்ளது.
ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தை பெற்றிருக்கிறது. 80 சதவீத பொம்மைகளை இறக்குமதி செய்கிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘நாட்டில் குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர்.
பிரதமர் இந்தியாவின் தற்காலத்தில் நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்’ எனப் பதிவிட்டுள்ளார்.