செக் குடியரசின் பல கிராமங்களில் வீசிய கடும் சூறாவளியினால், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு வீசிய இந்த சூறாவளி, தென்கிழக்கு ப்ரெக்லாவ் மற்றும் ஹோடோனின் மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு, மரங்கள் வேர்களோடு சாய்ந்தது. கார்கள் கவிழ்ந்தது.
குறைந்த பட்சம் மணிக்கு 219 கிமீ (136 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஒரு போர் மண்டலம் போல இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் ஆலங்கட்டி கற்கள் டென்னிஸ் பந்துகளின் அளவுக்கு விழுந்துள்ளது. ப்ரெக்லாவின் மறுபுறத்தில் உள்ள வால்டிஸ் கிராமத்தில், கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களும் சேதமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.