செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கு முன்னதாக, அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன் மற்ற நாடுகளுக்கு நகர்த்துவது அடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.
துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
18,000 ஆப்கானியர்கள் அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அது நீண்ட கால செயல்முறை என்பதால் தாமதமாகியுள்ளது.
வெள்ளை மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், ‘எங்களுக்கு உதவியவர்களுக்கு உதவ நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த வேறு எவரையும் போலவே அவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ என கூறினார்.
இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.