அமெரிக்கா- புளோரிடா மாகாணத்தில் மியாமிக்கு வடக்கே இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 99பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
எனினும், கட்டம் கீழே சரிந்து வீழ்ந்தபோது எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. முதற்கட்டமாக 12வயது சிறுவன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
தற்போது மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயற்படுகின்றனர்.
நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் சோனார் கெமராக்கள் மற்றும் விசேடமாக பயிற்சியளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்தி தப்பிப்பிழைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையும் முயற்சியில் கட்டடத்தின் கீழே ஒரு நிலத்தடி கார் நிறுத்துமிடத்திலிருந்து ஒழு குழுவினர். சுரங்கப்பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, ஜனாதிபதி ஜோ பைடன், புளோரிடாவிற்கான அவசர அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் மாநில நிறுவனங்களுக்கு நிவாரண முயற்சிகளுக்கு உதவும்.
குறித்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.