சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றது கவலையளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனா 100க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,
‘சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது’ என கூறினார்.
சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பரில் அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, சீனாவில் சுமார் 100 ஏவுகணைகள் இருந்தன. ஆனால் வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்த்தகம், உளவு மற்றும் தொற்றுநோய் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய காலங்களில் மோசமடைந்துள்ளன.