பஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பஷில் ராஜபக்ஷ பதவியேற்றமை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில், “நிதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவின் ஆளுமை என்பது எமது மக்களினால் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
அவ்வாறான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலிலும் பயணித்துக் கொண்டிருக்கும் எமது அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது.
அதேபோன்று, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பான நம்பிக்கையையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேலும், கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்து, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட வேலைத் திட்டங்களும், எம்மால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நிலையான இடத்தினை பிடித்திருக்கின்றமையினால், அவரின் தற்போதைய பதவியேற்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.