கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் 100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ மாவட்டத்தில் இதுவரை 7199 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்து 4995 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
மேலும் 1060 பேர், தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், கோறளைப்பற்று மத்தி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தொடர்ந்தும் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.