வடகொரியா மற்றும் சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமான 60ஆம் ஆண்டையொட்டி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 1961ஆம் ஆண்டு வடகொரியா, சீனா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின்படி தாக்குதல் சம்பவங்கள் நிகழும்போது இருதரப்பும் பரஸ்பரம் இராணுவம் மற்றும் இதர உதவிகளை உடனடியாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையொப்பமாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குக்கு வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் அனுப்பிய செய்தியில், ‘இருநாடுகளின் சமதர்ம நலனை பாதுகாப்பதிலும், முன்னெடுப்பதிலும் வடகொரியா, சீனா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தனது வலுவான சக்தியை வெளிப்படுத்துகிறது. இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்பதே வடகொரிய அரசின் ஸ்திரமான நிலைப்பாடு’ என்று கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வடகொரியா அரசாங்கத்துக்கு அனுப்பிய செய்தியில், ‘கிம் ஜோங் உன்னுடனான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலமும், இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நட்பார்ந்த உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல சீராக வழிநடத்துவதன் மூலமும் இருநாடுகளையும் மகிழ்ச்சிகரமாக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள், கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்புகளால் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் வடகொரியா சீனாவிடம் இருந்து அதிக அளவில் உதவிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.