எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட நஸ்ட ஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மற்றும் துறைசார் பணிப்பாளர்களுடனான மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே மேற்குறித்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பு அபிவிருத்தி, வி.எம்.எஸ் கருவிகளைப் பொருத்துவதற்கான முதற்கட்டப் பயனாளர் தெரிவு உட்பட அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
முன்பதாக அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் இந்தவாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்காக முதற் கட்டமாக 420 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான மதிப்பீடுகள் துறைசார் நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.