விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில், முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் 13 வயதான ஜப்பானின் மோம்ஜி நிஷியா தங்கபதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 13 வயது பிரேசில் வீராங்கனை ரேய்சா லீல் வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் 16 வயது ஃபனா நகாயாமா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்கேட்போர்டிங்கில் முதல்முறையாக தங்கபதக்கம் வென்றது குறித்து மோம்ஜி நிஷியா கூறுகையில்,
‘நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இளம் வீராங்கனை என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி’ என கூறினார்.
இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற பெருமை மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்கிடம் இருந்தது. ஸ்பிரிங்போர்ட் விளையாட்டிற்காக 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்ற இவருக்கு வயது 13 வருடம் 267 நாட்கள் அதாவது நிஷியாவை காட்டிலும் 63 தினங்கள் இளையவர்.
ஆண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ஜப்பானை சேர்ந்த 22 வயது யூடூ ஹோரிகோம் தங்கப் பதக்கம் வென்றார்.