நாடளாவிய ரீதியில் அனைத்து மக்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அமைவாக நீர் வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.
நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதேபிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய நீர் வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு சுற்றாடல் துறை அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் இதன்போது நீர் வழங்கல் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை நாம் துரிதப்படுத்த வேண்டும். குடிநீர் இன்மையால் வறண்ட பிரதேச மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இந்த குடிநீர் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதி உதவிகளையோ அல்லது மானியங்களையோ பெற்றுக்கொள்ள முடியும்.
சுற்றாடலை பாதுகாப்பது போன்றே புதிதாக மரக் கன்றுகளையும் நட வேண்டும்.
அதேபோன்று நீர் வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முறையாக செயற்படுத்த வேண்டும்.
அதற்கு சுற்றாடல் துறை அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுங்கள்’ என ஆலோசனை வழங்கினார்.
இதுவரை நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் குழாய் மூலமான பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய எதிர்வரும் 3 வருட காலப்பகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.