அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தக்கவைப்பதற்காக ஒஸ்திரியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்கா தனது பிடிவாதத்தை வெளிப்படுத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018ஆம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த ஒப்பந்தத்தை தக்க வைப்பது தொடர்பாக, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத மற்ற 5 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஒஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
அதேபோல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் முன்னோட்டமாக கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
ஆனால், ஈரான் ஜனாதிபதி தேர்தலையொட்டி கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் ஈரானின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறுகையில், ‘இதுவரை ஆட்சி செலுத்தி வந்த வந்த ஹஸன் ரௌஹானியின் தலைமையிலான அரசாங்கம், மேற்கத்திய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்ததை மேற்கொள்ளும்போது கையாண்ட மென்மையான அணுகுமுறையால் கிடைத்த அனுபவத்தை, புதிதாக அமையவிருக்கும் அரசு படிப்பினையாகக் கருதவேண்டும்.
மேற்கத்திய நாடுகள் நம் மீது ஒரு போதும் நம்பிக்கை வைக்காது என்பதுதான் அந்தப் படிப்பினை. மேற்கத்திய நாடுகள் மீது நம்பிக்கை வைப்பதும் பலனளிக்காது என்பதும் தற்போதைய அரசாங்கத்தின் அனுபவங்கள் சொல்லும் உண்மையாகும்.
மேற்கத்திய நாடுகள் நமக்கு உதவி செய்வதில்லை. அவர்கள் எந்தெந்த விவகாரங்களிலெல்லாம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த விவகாரங்களிலெல்லாம் தடையில்லாமல் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுமானால், அந்த ஒப்பந்தத்தில் பிற விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் குறித்த வாக்கியங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் வலியறுத்துகின்றனர்
ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள், மண்டல விவகாரங்கள் ஆகியவற்றில் தலையிடுவதற்கு அந்த வாக்கியங்களைப் பயன்படுத்த அமெரிக்கர்கள் திட்டமிடுகின்றனர். மற்ற விவகாரங்கள் குறித்துப் பேச நாங்கள் மறுத்தால், ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டது. எனவே அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று அவர்கள் சொல்வார்கள்’ என கூறினார்.