இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், தற்காலிகமாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற ஓய்வினை அறிவித்துள்ளார்.
‘இந்த மாத ஆரம்பத்தில் கிரிக்கெட்டுக்கு திரும்பியதிலிருந்து முழுமையாக குணமடையாத அவரது மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், அவரது இடது ஆள்காட்டி விரல் காயம் குணமடைவதற்கும் இந்த ஓய்வினை எடுத்துள்ளார்’ என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் ஊடக வெளியீடு தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கிரேக் ஓவர்டன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார்.
அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இங்கிலாந்தின் இரண்டாம் தர ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்ட பென் ஸ்டோக்ஸ், புதிதாக ஆரம்பமாகியுள்ள ‘த ஹன்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில் நோர்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார்.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி நொட்டிங்காமில் ஆரம்பமாகவுள்ளது.