துருக்கியை புரட்டி போட்டுவரும் காட்டுத் தீயினால், தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முக்லாவின் துர்கேவ்லெரி மாவட்டத்தில் உள்ள கெமர்கோய் அனல் மின் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் நேற்று (புதன்கிழமை) தீ பரவியது.
இதனால் பாதுகாப்பு கருதி ஆலையில் இருந்து அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில், எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களும் அகற்றப்பட்டன.
பிரதான கட்டடத்தை நோக்கி தீ மேலும் பரவினால், அணைப்பதற்கு தண்ணீர் டேங்கர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலக்கரி மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி இந்த ஆலை இயங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிலாஸ், அடானா, ஆஸ்மானியே, மெர்சின் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்தக் காட்டுத்தீ, தொடர்ந்து ஏழாவது நாளாக பரவி வருகின்றது. தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
துருக்கியில் கடந்த பத்து ஆண்டுகள் காணாத மிக மோசமான காட்டுத்தீ இது என்று கூறப்படுகிறது.
இந்தக் காட்டுத்தீயில் இதுவரை 8பேர் உயிரிழந்துள்ளனர் 800பேர் காயமடைந்துள்ளனனர். 95,000 ஹெக்டேர் நிலப்பரப்பு சேதமடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 180க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.