சிறிய மற்றும் நடுத்தர ரக தனியார் தொழில்களை தொடங்குவதை கியூபா அரசாங்கம் சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
புதிய விதிகளின்படி, 100பேர் வரை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள் இனி கியூபாவில் அனுமதிக்கப்படும்.
இதன்மூலம் இதுவரை சட்டப்பூர்வ அனுமதி இல்லாத உணவகங்கள், சுற்றுலா சார்ந்த தொழில்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்லாயிரம் தொழில்களுக்கு இனி சட்ட ரீதியான அனுமதி கிடைக்கும்.
கியூபாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால்தான் இந்தத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
தமது பொருளாதார மாதிரியை மேம்படுத்த கியூபா வலிமையான அடிகளை எடுத்து வைக்கிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி மிகுயேல் டையாஸ்-கேனல் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் மட்டுமே இயங்குவது விதியாக உள்ள கியூபாவில் தற்போது தனியார் நிறுவனங்களும் இயங்க அனுமதிக்கப்படுவது அந்நாட்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.