மே மாதம் நடந்த மோதலின் போது, காஸாவில் பாலஸ்தீனியர்களால், இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள், போர் சட்டங்களை அப்பட்டமாக மீறியது என்று பிரச்சாரக் குழு விசாரணையைத் தொடர்ந்து கூறியது.
நியூயோர்க்கை தளமாகக் கொண்ட உரிமைகள் குழு, இஸ்ரேலில் 12 பொதுமக்களைக் கொன்ற ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்களையும், காஸா பகுதிக்குள் ஏழு பாலஸ்தீனியர்களைக் கொன்ற தவறான ரொக்கெட் தாக்குதல்களையும் ஆய்வு செய்தது.
காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களால் 4,360க்கும் மேற்பட்ட வழிகாட்டப்படாத ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டன என இஸ்ரேல் கூறுகிறது. சண்டையின் போது காசா பகுதியில் 1,000 இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
காஸாவில் சுமார் 67 குழந்தைகள் மற்றும் 39 பெண்கள் உட்பட 254 பேர் கொல்லப்பட்டனர் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் 80 போராளிகளின் மரணத்தை ஒப்புக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறியுள்ளது.
இஸ்ரேலில் ஒரு சிப்பாயுடன் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஜெருசலேமில் பல வாரங்களாக இஸ்ரேல்- பாலஸ்தீனிய பதற்றத்திற்குப் பிறகு முஸ்லீம்கள் மற்றும் யூதர்களால் மதிக்கப்படும் புனித தலத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையால் இந்த மோதல் வெடித்தது.
இஸ்ரேலை தளத்திலிருந்து வெளியேறுமாறு எச்சரித்த காஸாவை ஆளும் தீவிரவாத இஸ்லாமியக் குழு, முதல் முதலாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்தது.
எனினும், காஸாவில் உள்ள இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கியதாகவும், பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.