கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சுகாதார அமைச்சு, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
ஆகவே இந்த கொரோனா தடுப்பூசியை கட்டாயம் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். சிலர் வேறு வேறு வருத்தங்கள் இருக்கின்றது என கூறி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்.
ஆனால் அவ்வாறானவர்கள்தான் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வாமை சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பின் தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள வைத்தியர்களுடன் பேசினால், அதற்குரிய நடவடிக்கையை அவர்கள் மேற்கொள்வார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.