மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில இடங்களில் மாகாண எல்லைகள் வரையில், பேருந்துகளில் பயணித்து, பின்னர் அங்கிருந்து நடைபாதையாக சென்று, வேறு பேருந்துகளின் மூலம் சிலர் பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவ்வாறு பயணிக்கும் பேருந்தின் உரிமையாளர், சாரதி, நடத்துநர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுடன் குறித்த பேருந்தும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமதியின்றி மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 361 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.