காபூலில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விட்டதாக, அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு கட்டமாக அவர்களை வெளியேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சுமார் ஆறாயிரம் இராணுவ வீரர்கள் காபூலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
விமான நிலையத்தை தங்களது பாதுகாப்பில் அமெரிக்க வீரர்கள் வைத்திருப்பதாகவும், வெளியேற விரும்புவோருக்கு வழி ஏற்படுத்தித் தருவதாகவும் கூறப்படுகிறது.
தூதரக பணியாளர்களைக் கொண்டு செல்லும் ஹெலிகொப்டர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நகரத்தின் வான்பகுதியில் பறந்து சென்றன.
மேலும், தூதரகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதால் தூதரக வளாகத்தின் அருகே புகை எழும்பியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் பிரித்தானியா உள்ளிட்ட மற்ற நாடுகளும் தங்கள் நாட்டவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. சில நாடுகள் தங்களது தூதரகங்களை மூடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
தலிபான்களால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதால், தனது தூதரகத்தை மூடுவதில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.