தலிபான்கள் முன்பு செய்த தவறுகளை செய்ய மாட்டார்கள்; அவர்கள் தற்போது விவேகத்துடனும் தெளிவான பார்வையுடனும் உள்ளனர் என சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் கூறுகையில், ‘ஆப்கான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த அமைப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தலிபான்களின் செயற்பாடுகளைக் கொண்டே அவர்கள் குறித்து பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மதிப்பீடு செய்ய வேண்டும்’ என கூறினார்.
முன்னதாக, சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என தலிபான் அமைப்பு தெரிவித்திருந்தது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியமைத்தால், சீனாவில் உய்கர் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பினருக்கு அவர்கள் அடைக்கலம் அளிக்கலாம் என்று சீன அதிகாரிகள் எச்சரித்தனர்.
எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த தலிபான்கள், ‘சீனாவை எங்களது நட்பு நாடாகக் கருதுகிறோம். எனவே, அந்த நாட்டின் உய்கர் இனத்தைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்’ என கூறினர்.