ஆப்கானிஸ்தான் மக்களின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக, சீனா உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கருத்து தெரிவிக்கையில், ‘ஆப்கான் விவகாரத்துக்கு மூலகாரணி அமெரிக்காதான். அந்நாட்டின் மறுகட்டமைப்புக்கு எதுவும் செய்யாமல் அமெரிக்கா எளிதாக கைவிட்டுவிட முடியாது. ஒட்டுமொத்த ஆப்கான் மக்களுக்கும் நட்புறவான கொள்கையையே சீனா பின்பற்றுகிறது.
அந்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக கணிசமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அந்நாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றத்துக்காக சாதகமான பங்களிப்பை சீனா தொடர்ந்து வழங்கும்.
ஆப்கான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. வெளிநாடு மற்றும் உள்நாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் திறந்த, பரந்த அடிப்படையிலான அரசாங்கத்தை ஆப்கனால் ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.
ஆப்கானில் உள்ள சீனர்கள் பெரும்பாலானோர் நாடு திரும்பவிட்டனர். அங்குள்ள எங்களது தூதரகம் எப்போதும்போல செயற்பட்டு வருகிறது. அந்நாட்டில் எஞ்சியுள்ள சீனர்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என கூறினார்.
ஆப்கனுக்கு 20 ஆண்டுகளாக அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் அந்நாடு வந்துள்ளதையடுத்து, நிதியுதவிக்காக தலிபான்கள் சீனாவையும், பாகிஸ்தானையும் அணுகக்கூடும் என ஆப்கான் மத்திய வங்கித் தலைவர் தெரிவித்துள்ளநிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அவசரகால கையிருப்பான 460 மில்லியன் டொலர்களை பெற முடியாத வகையில் முடக்கியுள்ளதாக சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.
ஆப்கானுக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 12 பில்லியன் டொலர்கள் நிதியுதவி அளிப்பதாக 60 நாடுகள் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதுவும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.