ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த, பரந்த தன்மையுடைய அரசாங்கத்தை அமைப்பதற்கு அண்டைய நாடுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியிடம் இந்த விடயத்தினை அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கள் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கடந்த நான்கு தசாப்தங்களில் சுமார் 4 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஈரான் இடமளித்துள்ளதாகவும், அது ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் இருப்பது அதன் பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருப்பதை ஈரான் அச்சுறுத்தலாகக் கண்டது. தலிபான்களின் அடுத்த நகர்வுகளை எச்சரிக்கையுடன் பார்த்தாலும் அது அமெரிக்க வெளியேற்றத்தை வரவேற்றுள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டில் தங்களது தூதரக அதிகாரிகளை தலிபான்கள் படுகொலை செய்ததையடுத்து, அந்த அமைப்பினருக்கு எதிரான வடக்குக் கூட்டணிப் படைக்கு ஈரான் ஆதரவு அளித்தது. ஆனால், தற்போது தலிபான்கள் மாறிவிட்டதாக ஈரான் கூறி வருகிறது.