காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் தலிபான்களுக்கு எதிராக போர் நடத்தி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிவருகிறது.
இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் ஆயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் மீட்கப்படாமல் உள்ளனர் என மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள தலிபான்கள், “எங்களிடம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர். காபூல் விமான நிலையத்தின் முழு கட்டுப்பாட்டை துரிதமாக எடுத்து கொள்ள அமெரிக்கர்களின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.