ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நடவடிக்கையை முடித்துக் கொண்டு, அந்த நாட்டிலிருந்து பிரித்தானிய படையினர் முழுமையாக வெளியேறி தாயகம் திரும்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்த கடைசி வீரர்களையும் ஏற்றிக் கொண்டு காபூல் விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட பிரித்தானியா விமானப் படை விமானம், ஆக்ஸ்ஃபோர்ட்ஷா் நகரிலுள்ள விமானப் படைதளத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வந்தடைந்தது.
இந்த விமானத்தில், ஆப்கானிஸ்தானுக்கான தூதர் சர் லாரி பிரிஸ்டோவும் இருந்தார்.
இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில், ‘வாழ்நாளில் இதுவரை காண்டிராத, சிரமம் நிறைந்த வெளியேற்றப் பணிகள் கடும் நெருக்கடிக்கிடையே முடிவுக்கு வந்தது’ என கூறினார்.
கடந்த ஒகஸ்ட் 14ஆம் திகதி முதல் பிரித்தானியாவால், சுமார் 2,200 குழந்தைகள் உட்பட 15,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்கள் உட்பட சுமார் 800 முதல் 1,100 தகுதியான ஆப்கானியர்கள் மற்றும் 100 முதல் 150 பிரித்தானியா நாட்டவர்கள் வெளியேறியுள்ளனர்.
ஏர்லிஃப்ட் செயற்பாட்டின் உச்சத்தில் 1,000க்கும் மேற்பட்ட பிரித்தானிய சேவை வீரர்கள் காபூலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.