நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து அணிக்கெதிராக பங்களாதேஷ் அணி முதல் முறையாக ரி-20 தொடரொன்றை வென்றுள்ளது.
டாக்கா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில் யங் 46 ஓட்டங்களையும் டொம் லதம் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், நசும் அஹமட் மற்றும் முஷ்டபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் மற்றும் சய்பூதின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 94 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் மொஹமட் நய்ம் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கோல் மெக்கொன்ச்சி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமதுல்லா தெரிவுசெய்யப்பட்டார்.