ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஐ.5.இன் இயக்குநர் கென் மெக்கல்லம் கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த நாட்டு அரசாங்கத்தை தலிபான்கள் மிக எளிதாக கவிழ்த்தனர். இது, உலக அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.
மேற்கத்திய நாடுகளில் அல்-கொய்தா பாணியில் மீண்டும் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தலிபான்களின் வெற்றி அந்த அமைப்புகளுக்குத் தூண்டுதலாக இருக்கும்’ என கூறினார்.
கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக விடைபெற்றதையடுத்து தலிபான்கள் நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமையப் பெற்று பிரதமர்,துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான்கள் பொதுவாக பழமைவாதத்தை பின்பற்றக்கூடியவர்கள். அதாவது, பழங்கால இஸ்லாம் மத விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.
இதன்படி, ஆப்கானிஸ்தான் முழுவதும் அதை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கத்தடை, மது அருந்தத் தடை,பெண்கள் வேலைக்கு செல்லத்தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகளை அவர்கள் விதித்து வருகின்றனர்.