அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ண தொடருக்குப் பிறகு விராட் கோஹ்லி, இந்தியாவின் ரி-20 அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் சர்மாவுடன் விவாதித்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது அணித்தலைமை பணிச்சுமையை சிறப்பாக நிர்வகிப்பதற்காக இந்த முடிவுக்கு வந்ததாக கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
என்னுடைய அணி வீரர்கள், அணி நிர்வாக குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது.
வேலைப் பளு என்பது மிக முக்கியமான விடயம் என்பதை புரிந்துகொள்கிறேன். கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக நான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிக வேலைப் பளு இருப்பதை உணர்கிறேன். அதேபோல கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அணியின் தலைவராக செயற்பட்டு வருவதாலும் வேலைப் பளு அதிகமாக உள்ளது.
எனவே இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்த எனக்கு சற்று வேலை குறைப்புத் தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதன் பொருட்டு ஒக்டோபர் மாதம் டுபாயில் நடக்கும் ரி-20 உலகக்கிண்ண தொடருடன் ரி-20 அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்.
நான் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு துடுப்பாட்ட வீரராக ரி-20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன்’ என கூறினார்.
2017ஆம் ஆண்டு டோனியிடம் இருந்து ரி-20 அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற விராட் கோஹ்லி, அணித்தலைவராக தனது முதல் தொடரிலேயே இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை 2-1 என வெற்றிகொண்டார்.
இதுவரை விராட் கோஹ்லி 45 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 29 வெற்றிகள், 14 தோல்விகள் மற்றும் இரண்டு போட்டிகளுக்கு முடிவில்லை.
சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த விராட் கோஹ்லி, 3,000 ரி-20 ஓட்டங்களை குவித்த ஒரே ஆண்கள் கிரிக்கெட் வீரர் ஆவார். அணித்தலைவராக கோஹ்லியின் துடுப்பாட்ட சராசரி 48.45 ஆகும். இதில் 12 அரைசதங்கள் அடங்கும்.
32 வயதான விராட் கோஹ்லி, இதுவரை 89 ரி-20 போட்டிகளில் விளையாடி 3,159 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 94 ஆகும். 28 அரைசதங்கள் அடித்துள்ளார்.
விராட் கோஹ்லி பதவியை துறக்கும் அதேவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலும் சாதித்துக்காட்டியுள்ள வெற்றிகரமான அணித்தலைவர் ரோஹித் சர்மா, ரி-20 அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.