முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், 1669ஆவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச சிறுவர் நாளான இன்றும், கொரோனா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு- மாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு, எங்கே எங்கே உறவுகள் எங்கே? , இலங்கை இராணுவத்திடம் கையளித்த எமது சிறுவர்கள் எங்கே?, எமது குழுந்தைகளுக்கு உயிர்வாழும் உரிமை இல்லையா?, எங்கள் குழந்தைகள் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.