இந்திய இசை கருவிகளின் சத்தம் மாத்திரமே வாகனங்களின் ஒலிப்பான் சத்தமாக பயன்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதற்காக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறியுள்ளதாவது, ஆம்புலன்சுகள் மற்றும் பொலிஸ் துறையினரால் பயன்படுத்தப்படும் சைரன்களின் சத்தத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் இசையில் ஒன்றை ஹார்ன் சத்தத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை அமைச்சர்களின் வாகனங்கள் கடந்து செல்லும்போது முழு அளவில் சைரன் ஒலிக்கப்படுவதால், மக்கள் எரிச்சல் அடைகின்றனர்.
இவை காதுகளுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. ஆகவே வாகனங்களின் ஹாரன் சத்தம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறோம்.
அனைத்து வாகனங்களின் ஹார்ன் சத்தமும் புல்லாங்குழல், தபேலா, மவுத்ஆர்கன், ஹார்மோனியம் போன்ற இந்திய இசை கருவிகளின் இசையாக மட்டுமே இருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.