தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினர் சற்குணம் என்றழைக்கப்படும் 47 வயதுடைய சபேசன் எனும் சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர், இந்தியாவில் விடுதலைப் புலிகளது, அனுதாபிகளின் கூட்டங்களை ஏற்பாடு செய்திருப்பது விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.
மேரும் போராளி அமைப்பின் மறுமலர்ச்சிக்காக, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு திருப்புவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்று விசாரணையின் போது, தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.