நாட்டிலுள்ள 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
15 – 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரையில் இவ்வாறான சுமார் 10 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இதற்கமைய, தற்போது 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் கூடிய தொழிநுட்ப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 18 மற்றும் 19 வயதுடைய சிறுவர்களுக்கு அதாவது உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச, மாவட்ட, போதனா மற்றும் தேசிய வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.