அமெரிக்காவுக்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலொன்று, தெற்கு சீனக் கடல் பகுதியில் அறியப்படாத பொருள் மீது மோதியதில் 15 அமெரிக்க துருப்புக்கள் காயமடைந்துள்ளனர்.
‘யு.எஸ்.எஸ் கனெக்டிகட்’ என்ற இந்தக் கப்பல் சனிக்கிழமையன்று நீருக்கு அடியில் அந்தப் பொருள் மீது மோதியதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இந்த மோதல் எதனால் நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
எனினும், வீரர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை மற்றும் கப்பல் இன்னும் முழுமையாக செயற்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பான மற்றும் நிலையான நிலையில் உள்ளது.
யு.எஸ்.எஸ். கனெக்டிகட்டின் அணு உலை ஆலை மற்றும் இடங்கள் பாதிக்கப்படவில்லை மற்றும் முழுமையாக செயற்படுகின்றன’ என கூறப்பட்டுள்ளது.
சேதத்தின் அளவு மதிப்பிடப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
யு.எஸ்.எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் தற்போது அமெரிக்கப் பிராந்தியமான குவாம்-ஐ நோக்கிப் பயணித்து வருகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனப் போர் விமானங்கள் நுழைந்ததாக அப்பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றம் உண்டாகி இந்த சூழலில் இது நிகழ்ந்துள்ளது.
சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக விளங்கும் தெற்கு சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.