இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று, நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சில இடங்களில், பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.