ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல இந்த அமைப்புதான் ஒகஸ்ட் மாதம் உலக நாடுகள் பல ஆப்கானிஸ்தானை விட்டு அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் மோசமான தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியது.
ஈராக்கில் இராக்கில் சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னர் திடீர் எழுச்சி பெற்ற ஐஎஸ் (இஸ்லாமிய தேசம்) பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் பிரிவுதான் ஐஎஸ்கே. ஐஎஸ்-கோராசான் மாகாணம் என்பதன் சுருக்கமே ஐஎஸ்கே.
கோராசான் பிராந்தியமானது இந்த இயக்கத்தின் பார்வையில் ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
ஈராக், சிரியாவில் ஐஎஸ் இயக்கம் வலுவாக இருந்தபோது 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கிளையாகத் தொடங்கப்பட்டது ஐஎஸ்கே.
ஐஎஸ் போலவே பரந்த இஸ்லாமிய தேசத்தை மத்திய மற்றும் தெற்காசியாவிலும் கட்டமைக்க வேண்டும் என்பதுதான் ஐஎஸ்கேயின் நோக்கமும்.
ஆப்கான்- பாகிஸ்தான் எல்லையில் உள்ள நங்கர்கர் மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது.
தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஆப்கானிஸ்தானின் வடக்கு, வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊரக மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
2018இல் ஐஎஸ்கே பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர். இதில் 75 சதவீத உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தன.
ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் ஐஎஸ்கே தாக்குதல் நடத்தியது. 2018இல் அந்த இயக்கம் நடத்திய 125 தாக்குதல்களில் 36 சதவீதம் தற்கொலைப் படைத் தாக்குதல்கள்.
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் உலகில் முதல் நான்கு கொடூரமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக ஐஎஸ்கே மாறியது.
2016ஆம் ஆண்டு இந்த இயக்கத்தில் சுமார் 4000 பேர் இருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஆப்கான் அரசாங்கப் படையின் நடவடிக்கையால் 2018இல் சுமார் 600 முதல் 800 பேராக குறைந்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறிய ஒகஸ்ட் இறுதி நிலவரப்படி ஐஎஸ்கேயில் சுமார் 2,000 பேர் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.