லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த போராட்டத்தில், நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்ததோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தை, விசாரித்த நீதிபதிக்கு எதிராக ஷியா முஸ்லிம் குழுக்கள் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய போராட்டத்தின் போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதே நேரத்தில் நான்கு பி 7 ரொக்கெட்டுகள் வீசப்பட்டன.
இந்தநிலையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா மற்றும் அதன் முக்கிய ஷியா கூட்டாளியான அமல் ஆகியோரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், லெபனான் தலைநகரின் நீதி அரண்மனை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கூரையில் இருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஹிஸ்புல்லா குழுவினர், ஒரு கிறிஸ்தவ பிரிவை குற்றம் சாட்டினார்கள், இருப்பினும் அந்தக் குழு குற்றச்சாட்டை மறுக்கிறது.
வன்முறையைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாக லெபனான் இராணுவம் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.