மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாங்கோனின் இன்சீன் சிறையில் இருந்த அரசியல் கைதிகளை மியன்மாரின் ஆட்சிக்குழு விடுவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட 5,600க்கும் மேற்பட்டவர்களை விடுவிப்பதாக திங்கள்கிழமை ஆட்சிக்குழு அறிவித்ததைத் தொடர்ந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகள் நாட்டிற்கு எதிராக எந்த வன்முறைச் செயல்களையும் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி அளித்து கையெழுத்திட வேண்டும் என்று ஆட்சிக்குழு மேலும் கூறியுள்ளது.
ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு, மியன்மாரின் பாதுகாப்புப் படைகள் 9,000க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது. அவர்களில் 7,355பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அரசியல் கைதிகளுக்கான இலாப நோக்கற்ற குழு உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் குறைந்தது 1,178பேர் கொல்லப்பட்டனர் என்றும் 7,355பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அரசியல் கைதிகளின் உதவிக்கான அமைப்பு கூறுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது.
தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக விளக்கம் அளித்த இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.
இதனைத்தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.