ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு தலிபான்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெண் ஊழியர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்ககெடுக்கவும், இந்த முகாம் நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசி முகாமில் பயன் பெறுவதற்கான வழி இல்லாமல் இருந்தனர்.
ஆனால், தற்போது நவம்பர் 8ஆம் திகதி தொடங்க உள்ள இந்த போலியோ முகாம் மூலம் ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் ஒரு கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்றாண்டு காலத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலனடையும் தடுப்பு மருந்து முகாமாக இது இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தலிபான்கள், இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை இழக்க செய்வதற்காக மேற்கத்திய நாடுகள் செய்யும் சதியே தடுப்பு மருந்து என கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.