ஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன.
மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லாவை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துப் பேசிய பின்னர், இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அண்டைய நாடான அவுஸ்ரேலியா உருவாக்குவது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்குள் பிற நாடுகள் அடிக்கடி வருவதற்குத் தூண்டும். இதன்மூலம் வல்லரசு போட்டி அதிகரிக்கக்கூடும்.
பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை தொடர்வதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். தற்போதைய சூழலானது ஆயுதப் போட்டியில் பதற்றத்தை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை’ என கூறினார்.
பின்னர் இரு அமைச்சர்களும் கூட்டாக ஊடகங்களிடம் கூறுகையில், ஆசியான் அமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மைக்கு உறுப்பு நாடுகள் பங்களிக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘ஆக்கஸ்’ என்ற பெயரிலான முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியை அண்மையில் தொடங்கின.
தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்தப் பாதுகாப்புக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இக்கூட்டணியின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்ரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கு உதவுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்க நிபுணத்துவத்தின் உதவியுடன் அவுஸ்ரேலியா குறைந்தது எட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கும் அதேவேளையில், டீசல் மூலம் செயற்படும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிப்பதற்காக பிரான்ஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் கைவிடும்.