ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், பப்புவா நியூகினியை வீழ்த்தி பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுள்ளது.
அல் அமரத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) குழு ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில், பப்புவா நியூகினி அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா 50 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பப்புவா நியூகினியின் பந்துவீச்சில், கபுவா மொரியா, டேமியன் ராவு மற்றும் அசாட் வாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மிமோன் அடய் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பப்புவா நியூகினி அணி, 19.3 ஓவர்கள் நிறைவில், 97 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, அடுத்த சுற்றான சுப்பர் 12க்கு முன்னேறியுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிப்ளின் டோரிகா ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் சாட் சோபர் 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் சய்பூதின் மற்றும் டஸ்கின் அஹமட்; ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 46 ஓட்டங்களையும் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.