ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், ஓமான் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்று ஸ்கொட்லாந்து அணி சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
அல் அமரத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) குழு ‘பி’ பிரிவில் நடைபெற்ற பத்தாவது போட்டியில், ஓமான் அணியும் ஸ்கொட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அகிப் இலியாஸ் 37 ஓட்டங்களையும் ஸிஷன் மக்சூத் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில். டேவே 3 விக்கெட்டுகளையும் சப்யான் செரீப் மற்றும் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்க் வாட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி, 17 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்கொட்லாந்து அணி அடுத்த சுற்றான சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கைல் கோட்சர் 41 ஓட்டங்களையும் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஸ் டேவே தெரிவுசெய்யப்பட்டார்.