பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹதீம் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெஹ்ரி-, லெப்பைக் அமைப்பினர் நேற்று லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது பொலிஸார் வைத்திருந்த சோதனைச் சாவடிகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் செயற்பட்டு வரும் தெஹ்ரி-இ-லெப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் அமைப்பு இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் எனக்கூறி வருகிறது இந்த அமைப்பின் தலைவராக ஹதீம் ஹசன் ரிஸ்வி செயற்பட்டு வருகிறார்.
இந்த அமைப்பு பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.
இந்த அமைப்பு சார்பில் நடைபெறும் போராட்டங்கள் பெரும்பாலானவை வன்முறையிலேயே முடிகிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு பிரான்ஸ் அரசுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் தெஹ்ரி-இ-லெப்பைக் அரசியல் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.
மேலும் அந்த அமைப்பின் தலைவர் ஹதீம் ஹசன் ரிஸ்வி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.