இந்தியாவில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான ஐ.பி.எல். தொடரில், புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி புதிதாக லக்னொவ் மற்றும் ஹமதாபாத் அணிகள் மேலதிகமாக இரண்டு அணிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் லக்னொவ் அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி- எஸ்.ஜி. குழுமம் இந்திய மதிப்பில் 7,090 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இதேபோல, ஹமதாபாத் அணியை சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிட்டல் 5,600 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இதில் ஆர்.பி.-எஸ்.ஜி. குழுமம், ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி உரிமையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று (திங்கட்கிழமை) மும்பையில் நடந்த இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் சுமார் 10,000 கோடி ரூபாய் ஈட்டலாம் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எதிர்பார்த்த நிலையில், அதற்கு 12,960 கோடி ரூபாய்க்கு கிடைத்துள்ளது.
புதிதாக இணையும் நிறுவனங்களுக்கான அதிகாரப்பூர்வ பெயரும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. புதிய அணிகள் இணைவதால் அடுத்த சீசன் முதல் ஐபிஎல் போட்டியின் போட்டிகள் எண்ணிக்கை 74ஆக அதிகரிக்கிறது.