தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில், ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதை மருந்துக் குவியல் கைப்பற்றப்பட்டுள்ளது.
55 பில்லியன் மெதாம்பிடமின் மாத்திரைகள் மற்றும் 1.5 டன்னுக்கும் அதிகமான கிறிஸ்டல் மெத் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றப் பிரிவு முகமை கூறியுள்ளது.
இது ஆசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப் பெரிய அளவிலான போதை மருந்து குவியல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் மியன்மார் எல்லைப் பகுதியான பொகெயோவில், பீயர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஒரு லொரியை தடுத்து நிறுத்தி சோதித்த போது இத்தனை பெரிய அளவில் போதை மருந்து கடத்தப்படுவது தெரியவந்தது.
தங்க முக்கோணம் என்று அழைக்கப்படும் இப்பகுதி, போதைப்பொருள் உற்பத்தி செய்யும் முக்கிய இடமாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பிரதிநிதி ஜெரமி டக்ளஸ் கூறுகையில், ‘கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றில் இது மிகப்பெரிய கைப்பற்றல்.
சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்தின் எல்லையான மியான்மரின் ஷான் மாநிலத்தில் அமைதியின்மை காரணமாக சமீபத்திய மாதங்களில் ‘தங்க முக்கோணம்’ பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது’ என கூறினார்.
ஒரு வார காலப்பகுதியில் ஒரே பகுதியில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 16 மில்லியன் ஆம்பெடமைன் மாத்திரைகளை பொலிஸார் சமீபத்தில் கைப்பற்றியதை அடுத்து இந்த சாதனை முறிவு ஏற்பட்டுள்ளது.