சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாப்பதற்கான முழு வலிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மார்க் மில்லே இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இன்னும் 24 மாதங்கள் வரை தாய்வான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பில்லை. ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால், அதிலிருந்து தாய்வானை அமெரிக்கா பாதுகாக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை.
தாய்வானைப் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து பின்பற்றி வருகிறது. அந்தத் தீவை சீனா கைப்பற்ற முயன்றால், அதனைத் தடுத்து நிறுத்துவது குறித்து ஜனாதிபதி முடிவெடுப்பார்.
சீனாவிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்று தாய்வான் கேட்டுக்கொண்டால், அந்தத் தீவைப் பாதுகாக்கும் முழு திறனும் அமெரிக்காவுக்கு உள்ளது. இதுமட்டுமன்றி, உலகம் முழுவதும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளும் வலிமையும் அமெரிக்காவுக்கு உள்ளது.
தாய்வான் மீது சீனா தற்போதைக்கு தாக்குதல் நடத்தாது என்றாலும், பிற்காலத்தில் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திறனை சீனா வளர்த்துக்கொண்டு வருகிறது. சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையிலான பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும்’ என கூறினார்.
சீனாவுடன் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர், தாய்வான் தனி நாடானது. ஆனால், இதை சீனா ஏற்காமல், தங்களது ஒருங்கிணைந்த பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது.
எனினும் தாய்வான், சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜனநாயக முறையிலான அரசாங்கம் தான் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
இந்தநிலையில் சீனக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள தாய்வானை, சீனாவுடன் மீண்டும் இணைப்போம் என்று சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதனிடையே கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் அத்துமீறல்கள் தாய்வானில் பதிவாகியுள்ளது.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தாய்வான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்துள்ளார்.