தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னிலங்கை மைய ஊடகங்கள் ஒளிபரப்பிய காணொளிகளில் ஒன்றில் ஒரு பண்டிகை நாளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வரிசையாக நிற்கும் மக்களை காட்டின. வேறொரு காணொளியில் மண்ணெண்ணைக்காக காத்து நிற்கும் நீண்ட வரிசை காட்டப்படுகிறது. மூன்றாவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் கடவுச்சீட்டை பெறுவதற்காக காத்திருக்கும் நீண்ட வரிசை. இவ்வாறு வரிசையில் நிற்கும் மக்களை ஊடகங்கள் பேட்டி காண்கின்றன. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு ஒரு இரும்பு மனிதன் வேண்டுமென்று கூறி அவர்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் மகிமையை இழந்து விட்டதை அவை காட்டுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு பெரும் தொற்றுநோய் நாட்டைத் திணறடித்தபொழுது மக்கள் ஒருபுறம் எரிவாய்வுக்காகவும் பால் மாவுக்காகவும் வரிசையில் நின்றார்கள். இன்னொருபுறம் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் நின்றார்கள். இவை தவிர மின் தகன சாலைகளில் பெருந்தொற்று நோயால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காகவும் காத்து நின்றார்கள்.
அரசாங்கம் வேகமாக தடுப்பூசிகளை ஏற்றி வைரஸின் தாக்கத்தை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.ஆனாலும் மக்கள் தொடர்ந்தும் ஏதோ ஒன்றுக்காக நீண்ட வரிசைகளில் காத்து நிற்கிறார்கள். அரசாங்கம் பொருட்களின் விலைகள் மீதிருந்த கட்டுப்பாட்டை நீக்கி விட்டது இப்பொழுது வர்த்தகர்கள் வைத்ததுதான் விலை. இது ஒரு புறம். இன்னொருபுறம் பொருள் விநியோகம் இன்னமும் சீராகவில்லை. அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை சதோசவில் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கின்றது. ஆனால் அது உண்மை அல்ல பொருட்கள் அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியவில்லை அதுதான் தீபாவளி நாளில் வரிசையாக நின்ற மக்கள் கூறிய தகவல்.
குறிப்பாக சமூக முடக்கம் விலக்கப்பட்டதும் நாட்டைவிட்டு வெளியேற கடவுச் சீட்டை பெறுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.
அண்மையில், kapuruka கப்புறுகா நிறுவனத்தின் நிறுவனர் துலித் ஹேரத் பின்வருமாறு தனது ருவிற்றர் தளத்தில் பதிவிட்டிருந்தார் “அதிர்ச்சி தரக்கூடிய எண்ணிக்கையிலான நண்பர்களும் தெரிந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்துள்ளார்கள். இது அவசரமான குறுகிய பார்வை.ஆனாலும் அவர்களுடைய விரக்தியை புரிந்து கொள்கிறேன்”.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி அண்மையில் தெரிவித்த தகவல்களின் படி தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளார்களாம். அதோடு,அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளார்களாம். மேலும், இந்நாட்களில், ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்றும் பொதுவான சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,000 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி,குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2,200 விண்ணப்பங்கள் கிடைப்பதாக தெரிகிறது.
அதாவது நாட்டைவிட்டு இளையோரும் மூளை உழைப்பாளிகளும் வெளியேற முயற்சிப்பதை இது காட்டுகிறது.அதைத்தான் கடந்த செவ்வாய்க்கிழமை தாமரை மொட்டு கட்சியின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பின்வருமாறு சுட்டிக்காட்டியிருந்தார்….”நாம் வெற்றி ஈட்டிய ஆரம்ப நாட்களில் இந்த நாட்டின் இளைஞர்கள் நாடு முழுவதும் சுவர்களில் ஓவியங்களை வரைந்தனர். அடையாளம் தெரியாத இளைஞர்கள் பெயர், முகவரிகளை குறிப்பிடாது படங்களை வரைந்தனர். சொந்த செலவில் நிறப்பூச்சுக்களை பெற்று பேருந்து நிறுத்தங்கள், அரசு அலுவலகங்கள், பாடசாலை சுவர்கள் என இரவு முழுவதும் வண்ணம் தீட்டினர். எவரது அழைப்போ, எவரது உத்தரவோ இருக்கவில்லை. இன்று அந்த ஓவியங்களை தீட்டிய இளைஞர்கள் எங்கே என்று எமக்கு தெரியவில்லை. கட்சி அரசியல் தொடங்கிய நாள் முதல் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசியலினால் நாட்டை அசிங்கப்படுத்த வேண்டாம் என்றே ஓவியம் வரைந்த இளைஞர்கள் கூறினர். நாம் அச்செய்தியை புரிந்துக் கொள்ள வேண்டும்.இன்று கடவுச்சீட்டு பெறுவதற்காக அந்த இளைஞர்கள் வரிசையில் நிற்கின்றனரா என்பதை தேடிப்பாருங்கள். அந்த வரிசையில் அவர்கள் நிற்பார்களாயின் அவர்களை மீண்டும் இந்நாட்டிற்கு கொண்டுவரக்கூடிய அரசியலில் ஈடுபடுங்கள். அதுவே பொதுஜன பெரமுனவில் எமக்குள்ள வரலாற்று எதிர்கால பணியாகும்.”
இளையோரும் மூளை உழைப்பாளிகளும் நாட்டை விட்டு வெளியேறும் ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது ? அரசாங்கம் போரில் வென்று கொடுத்த ஒரு நாட்டில் வசிக்காமல் ஏன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்? சுமார் 20 மாதங்களுக்கு முன்பு இந்த மக்கள்தானே ஒரு இரும்பு மனிதர் வேண்டும் என்று கேட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள்? இப்பொழுது அந்த மனிதரின் ஆட்சியை விரும்பாமல் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்? ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து இந்த மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் முடிகின்றன.இவ்விரண்டு ஆண்டுகளிலும் அவர் வாக்குறுதி அளித்த நாட்டை அவரால் கட்டி எழுப்ப முடியவில்லை.
அரசாங்கம் தடுப்பூசிகளை வேகமாக ஏற்றி வைரஸ் பரவலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.மேற்கு நாடுகளோடும் இந்தியாவோடும் ஐநாவோடும் உறவுகளை ஒப்பீட்டளவில் சீர்செய்து வெளியுறவு பரப்பில் இருந்த பகை நிலையை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கிறது. ஆனால் உள்நாட்டில் வைரஸ் தொற்று ஒன்றைத்தவிர ஏனைய பெரும்பாலான விடயங்களில் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.அரசாங்கம் இப்பொழுது பின்வரும் முனைகளில் நெருக்கடிகளை எதிர் கொள்கிறது.
முதலாவது ஆட்சிக்குள்ளேயே பங்காளிக் கட்சிகளின் எதிர்ப்பு. பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக எச்சரித்தாலும் கூட அவர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பு உடனடிக்கு இல்லை என்று தெரிகிறது. ஏனென்றால் அரசாங்கத்தை விட்டு வெளியே வந்து அவர்கள் லிபரல்களோடு சேர முடியாது. அவர்களுடைய இனவாத நிலைப்பாடுதான் அவர்களை அரசாங்கத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது. ஆனால் போரில் வெற்றிபெற்ற ஓர் அரசாங்கத்தை விடவும் அதிக இனவாதத்தை அவர்களால் விற்க முடியாது.எனவே அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு தனி இருப்பு கிடையாது.அரசாங்கமாக அவர்களை வெளியே துரத்தாதவரை அவர்கள் வெளியில் போவார்களா என்பது சந்தேகமே.
இது முதலாவது முனை. இரண்டாவது முனை-பொருளாதார நெருக்கடி. பொருளாதார நெருக்கடியை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களின்மூலம் ஓரளவுக்கு சீர் செய்யலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. ஆனாலும் நிலைமை இப்பொழுதும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
மூன்றாவது முனை-பல்வேறு காரணங்களை வைத்து போராடும் தொழிற்சங்கங்கள்.எட்டு தொழிற்சங்கங்கள் அவ்வாறு தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.அவற்றுக்கு தீர்வு வழங்க அரசாங்கத்தால் முடியாமல் இருக்கிறது. பொருளாதாரத்தை சீர் செய்யாமல் தொழிற்சங்கங்களுக்கு தீர்வு வழங்க முடியாது.
நாலாவது அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கைகள் காரணமாக நிறுத்தப்பட்ட செயற்கை உரத்தை கேட்டுப் போராடும் விவசாயிகள். ஒருபுறம் விவசாயிகளின் எதிர்ப்பு. இன்னொருபுறம் உரப் பாவனை குறைந்மையால் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்று கணிப்புகள் காட்டுகின்றன.
ஐந்தாவதாக எதிர்க்கட்சிகள். ஆனால் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதுதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய பலம். இந்த நவம்பர் மாதத்தோடு கோட்டாபயவின் ஆட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிகின்றன.அதையொட்டி பேராசிரியர் ஜயதேவ உயங்கொட எழுதிய ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியிருப்பதுபோல பலவீனமான எதிர்க்கட்சிகள்தான் இந்த அரசாங்கத்துக்கு இப்பொழுது உள்ள மிகப்பெரிய பலமாகும். மக்கள் மத்தியில் அதிருப்தியும் விரக்தியும் கோபமும் அதிகரித்து வருவது வெளிப்படையானது. அதை ஒரு அரசியல் ஆக்கசக்தியாக திரட்டி எடுக்க எதிர்க்கட்சிகளால் முடியாதிருக்கிறது. covid-19 மட்டும்தான் அதுக்கு காரணம் அல்ல. இப்போதிருக்கும் எதிர்க்கட்சிகளால் அவ்வாறு ஒன்று திரண்டு போராட முடியவில்லை என்பதும் ஒரு காரணம்தான். எதிர்க்கட்சிகள் வரும் 16ஆம் திகதி ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்கின்றன. பரம்பரிய கட்சியான யுஎன்பி சாதி ஏற்றத்தாழ்வுகளால் உடைந்து போயிருக்கிறது. சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு அதுவே காரணம்.தவிர சஜித் பிரேமதாசவும் அவருடைய தகப்பனைப் போல ஒரு கெட்டிக்காரனாக தன்னை இன்றுவரை நிரூபிக்க தவறி விட்டார். இந்நிலையில் மறுபடியும் சிங்கள உயர் சாதிகளின் மத்தியில் இருந்து ஒரு பலமான தலைமையை தேடுவதிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளும் கழிந்துவிட்டன.
ஒரு பலமான எதிர்க்கட்சித் தலைமை என்பது இப்போதிருக்கும் நிலைமையை பொறுத்தவரையிலும் மூன்று இனங்களையும் கவரக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.ஏனெனில் யுத்தவெற்றி வாதத்தை தோற்கடிப்பதற்கு தனியாக சிங்கள மக்களால் மட்டும் முடியாது.சிங்கள மக்கள்தான் ராஜபக்ஷக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் ஆகப் பிந்திய வளர்ச்சியாகும். அது ஈஸ்டர் குண்டு வெடிப்போடு தன்னை அடுத்த கட்டத்துக்கு அப்டேட் செய்து விட்டது. ஈஸ்டர் குண்டு வெடிப்பின் விளைவாக ஓர் இரும்பு மனிதர் வேண்டும் என்று கருதி கோத்தாபயவை தெரிவு செய்தது சிங்கள மக்கள்தான்.
ஆனால் இந்த ஆட்சியை தோற்கடிப்பது என்றால் அதற்கு சிங்கள மக்களால் மட்டும் முடியாது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றைத் தொகுத்துப் பார்த்தால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் எழுச்சியை சவாலுக்கு உட்படுத்தும் சக்தி தனிய சிங்கள லிபரல்களுக்கோ,முற்போக்கான நடுத்தர வர்க்கத்துக்கோ கிடையாது. அவர்கள் தமிழ் முஸ்லிம் மலையக மக்களோடு கூட்டுச் சேர்ந்தால்தான் அதைச் செய்யலாம். 2015ஆம் ஆண்டு அவர்கள் அதைச் செய்ர்கள். ஆனால் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அந்த ஆட்சியின் மூன்று ஆண்டு காலத்தின் தோல்வியும், ஈஸ்டர் குண்டுவெடிப்பும்தான் ராஜபக்சவின் இரண்டாவது எழுச்சிக்கான அடிப்படைகள் ஆகும்.
எனவே இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு இப்போதுள்ள நிலைமைகளின்படி எதிர்க் கட்சிகளால் முடியாது என்பதே உண்மை.மூன்று இனங்களையும் ஒருங்கிணைத்து,தொழிற்சங்கப் போராட்டங்களை ஒருங்கிணைத்து அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் வல்லமை எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகாலம் நிரூபித்திருக்கிறது. மூன்று இனங்களாலும் நம்பிக்கையோடு பார்க்கப்படும் ஒரு தலைவரை எதிர்க்கட்சிகள் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.அப்படி ஒரு தலைவரை கண்டுபிடிக்கும் வரையிலும் பொதுமக்களின் ஏமாற்றத்தையும் எதிர்ப்பையும் ஒன்றுதிரட்ட எதிர்க்கட்சிகளால் முடியாது. அதுவரையிலும் சமல் ராஜபக்ச கூறியதுபோல மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வேண்டியதுதான்.