உலக உணவுத் திட்டத்தில் பணிபுரியும் 72 ஓட்டுநர்களை, நாட்டின் மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கில் எத்தியோப்பிய அதிகாரிகள், தடுத்து வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தலைநகர் அடிஸ் அபாபாவில் ஐ.நா. தனது 22 ஊழியர்களைக் கைது செய்ததாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டையின் தீவிரத்திற்கு மத்தியில் டிக்ராயன் இன மக்கள் பரவலாகக் கைது செய்யப்பட்டதாக சர்வதேச எச்சரிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, எத்தியோப்பியாவின் தலைநகரில் 16 உள்ளூர் ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
உலக அமைப்பின் கூற்றுப்படி, நூறாயிரக்கணக்கான மக்கள் பஞ்சம் போன்ற சூழ்நிலையில் வாழும் டிக்ரே பகுதிக்கு செல்லும் ஒரே செயற்பாட்டு வீதியில், அஃபார் மாகாணத்தின் தலைநகரில் சமீபத்திய சம்பவங்கள் நடந்ததாக ஐநா செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உலக உணவுத் திட்டத்தில் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட 72 ஓட்டுநர்கள் செமராவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
எத்தியோப்பியா அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டு, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்கிறோம்.
அவர்களின் பாதுகாப்பையும் அவர்களின் சட்ட மற்றும் மனித உரிமைகளின் முழுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாங்கள் அரசாங்கத்துடன் வாதிடுகிறோம்’ என கூறினார்.
டிக்ராயன் போராளிகளும் அதனுடன் இணைந்த ஒரோமோ லிபரேஷன் ஆர்மி கிளர்ச்சியாளர்களும் தலைநகரை நோக்கி முன்னேறலாம் என்ற அச்சத்தின் மத்தியில் அரசாங்கம் கடந்த வாரம் நாடு தழுவிய ஆறு மாத அவசரநிலையை அறிவித்தது.